இந்நாவலைப் படித்து முடிக்கையில் சமகாலத் தமிழ்ச் சமூகத்தின் சிக்கலான சுழல்வட்டப்பாதைகளில் ஒரு நீண்ட பயணத்தைக் கடந்து வந்த பிரமிப்பும் பேருவகையும் ஏற்படுகிறது. இது குடும்பங்களின் கதை அல்ல. இது கிராமங்களின் கதை அல்ல. தமிழக சாதியப்பொருளாதார உறவுகளில் கடந்த கால் நூற்றாண்டு காலமாக நடந்திருக்கும் மாற்றங்களைத் துல்லியமாகச் சொல்லும் முதல்நாவல் இது. குடும்ப உறவுகளிலும் சமூக உறவுகளிலும் நிகழ்ந்த மாற்றங்களுக்கும் நில உறவுகளில், உற்பத்தி உறவுகளில நிகழ்ந்த மாற்றங்களுக்குமான தொடர்புகளை மிக நேர்த்தியாக இந்த நாவல் அடையாளம் காண்கிறது. கார்ல் மார்க்ஸின் மொழிநடை ஓர் எதார்த்தவாத நாவலின் எல்லைகளை மீறாமல் கவித்துவமான சித்திரங்களை உருவாக்கிக்கொண்டே செல்கிறது. இந்த நாவலின் கதாபாத்திரமொன்று தன் துயரத்தின் பூதத்திடம் நீதி கேட்டு மன்றாடுவதுபோல இந்த நாவல் முழுக்க நிறைந்திருக்கும் துயர பூதங்கள் தமிழ் வாழ்வின் சொல்லப்படாத கதைகள் பலவற்றை நமக்குச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. தமிழில் மிக முக்கியமான நாவலாசிரியன் ஒருவனின் வருகையை இந்த நாவல் அறிவிக்கிறது. - மனுஷ்ய புத்திரன்